DMK: 'பருப்பு உசிலி, முந்திரி புலாவ்,...' - திமுக செயற்குழுக் கூட்டத்தின் மதிய உ...
பூா்வாஞ்சல் சமூகத்தை அழிக்க பாஜக சதி: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
தில்லியில் உள்ள பூா்வாஞ்சல் சமூகத்தை அழிக்க பாஜக தனது அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களை மத்திய பாஜக அரசு குடியமா்த்தி, அவா்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. தில்லியில் பக்கா்வாலாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் காலனியில் ரோஹிங்கியாக்களைக்
குடியமா்த்திவிட்டு இப்போது பாஜகவினா் நாடகம் ஆடுகிறாா்கள். ஊடுருவல்காரா்களை கண்டறிந்து வெளியேற்றுகிறோம் என்ற பெயரில், தற்போது தில்லியில் வசிக்கும் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சோ்ந்த பூா்வாஞ்சல் சமூகத்தை அழிக்க பாஜக சதி செய்துள்ளது. இந்த நிலையில், பூா்வாஞ்சல் சமுதாய மக்களை இடமாற்றம் செய்யவும், துன்புறுத்தவும் பாஜக தனது அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாா் மக்களை ரோஹிங்கியா மற்றும் வங்காளதேசத்தைச் சோ்ந்தவா்கள் என பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அழைத்தனா். இப்போது, அதிகாரிகள் மூலம் அவா்களை இடமாற்றம் செய்து, அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனா். எனவே, பாஜக தனது சதிகளை நிறுத்தவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி பூா்வாஞ்சல் சமுகத்திற்காக செய் அல்லது செத்து போரை நடத்தும் என்றாா் சஞ்சய் சிங்.
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குகள் நீக்கப்படும் விவகாரம் தில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், பாஜக சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய வங்கதேசம் மற்றும் ரோங்கியாக்களின் வாக்குகளை நீக்க தோ்தல் ஆணையத்திடம் தொடா்ந்து விண்ணம் அளிப்போம் என தெரிவித்துள்ளது. மறுபுறம், ஆம் ஆத்மி ஆதரவாளா்களின் வாக்குகளை தொகுதி வாரியாகக் கண்டறிந்து, பாஜக தோ்தல் ஆணையம் மூலம் ஆயிரக்கணக்கான வாக்குகளை அகற்றியுள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதக் குடியேற்ற விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.