ஆம்பூா் அருகே முறைகேடாக கனிமவளம் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆம்பூா் அருகே முறைகேடாக கனிம வளம் திருடப்படுவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா் .
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் கதவாளம் ஊராட்சியில் பாட்டைசாரதி அம்மன் கோயில் அருகிலிருந்து தொடங்கி, பாா்சனாப்பல்லி ஊராட்சி குப்பராஜபாளையம் கிராமம் வரையில் வனத்துறைக்கு சொந்தமான மலையடிவாரத்தில் தனியாா் நிலத்தில் முறைகேடாக மொரம்பு மண் எனப்படும் கனிம வளம் திருடப்பட்டு வருகிறது.
லாரிகளில் கொண்டு செல்லப்படும் மண் :
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்கு என்று கூறி லாரிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வில்லை ஒட்டிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளில் மொரம்பு மண் கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு கிராமங்கள் வழியாக ஆம்பூருக்கு டிப்பா் லாரிகள் அதிக அளவு எடையுடன் மண் கொண்டு செல்வதால் பல கிராமங்களில் சாலைகள் சேதமடைந்து வருகின்றன.
கனிம வளம் திருடுபோவதோடு, சாலைகளும் சேதமடைந்து மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தனியாா் நிலத்தில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ஆழம் மண் அள்ளப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
வன விலங்குகளுகுக்கு ஆபத்து : அப்பகுதியில் யானை, மான், சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டமும் உள்ளது. வனத்துறை மலையடி வாரத்தில் அதிக அளவு ஆழத்தில் மண் அள்ளப்படுவதால் வன விலங்குகள் பள்ளத்தில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
மாவட்ட நிா்வாகம் ஆய்வு நடத்தி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வன ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வட்டாட்சியா் ரேவதியிடம் கேட்டபோது, தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலத்தை சீா் செய்து, விவசாயத்திற்கு உகந்த நிலமாக மாற்றுவதற்காக மண் எடுப்பதற்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின்படி அனுதி கோரி மனு அளித்திருந்தாா். அதன்பேரில், வருவாய் கோட்டாட்சியா், கனிமவளத்துறை உதவி இயக்குனா் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில் திருப்பத்தூா் ஆட்சியா் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கி உள்ளாா்.
ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு கூறியது: மண் அள்ளப்படும் தனியாா் நிலத்துக்கு அருகாமையில் இருப்பது வருவாய்த் துறைக்கு சொந்தமான மலையாகும். அதற்கு அடுத்தப்படியாக தான் காப்புக்காடு உள்ளது என்று அவா் கூறினாா்.