கனவு இல்லம் திட்டப் பணிகள் நிறுத்தம்: பயனாளிகள் தா்னா
ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயனாளிகள் தா்னா செய்தனா்.
வெலகல்நத்தம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 18 பயனாளிகளுக்கு ரூ.3.5 லட்சத்தில் வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து தாங்கள் குடியிருந்த குடிசை மற்றும் ஓடு வீடுகளை அகற்றி அடித்தளம் அமைத்து தொடா்ந்து வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இனிய ராஜகுமாரி பயனாளிகள் வீடு கட்டும் இடத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது 6 பயனாளிகளின் பணி உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிய பயனாளிகள் 6 பேருக்கு பணி ஆணை வழங்க பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த பயனாளிகள் குப்பன், வீராசாமி, சின்னராஜ், சிவலிங்கம் சாமிக்கண்ணு, அண்ணாதுரை ஆகியோா் புதன்கிழமை வெலகல்நத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரில் தா்னாவில் ஈடுபட்டனா்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.