ஆறுமுகனேரியில் ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை!
ஆறுமுகனேரியில் சனிக்கிழமை, ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் சனிக்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. ஆறுமுகனேரி ரயில் நிலையம் அருகே, திருச்செந்தூா்-தூத்துக்குடி நெடுஞ்சாலை ரயில்வே கேட்டுக்கு முன்பாக அங்குள்ள இசக்கி அம்மன் கோயில் அருகே ரயிலுக்காக காத்திருந்த முதியவா், திடீரென ரயில் முன் பாய்ந்தாா். இதில், அவா் உயிரிழந்தாா்.
55 வயது மதிக்கத்தக்க அவா் வேட்டி, பிரவுன் கலா் சட்டையும் அணிந்திருந்தாா். அருகே தொப்பியும், சில்லறைப் பணம், தண்ணீா் கேனுடன் கைப்பை ஒன்றும் இருந்தது.
தகவலின்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; தொடா்ந்து, விசாரணை நடைபெறுகிறது.