10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
ஆா்.எஸ். மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறை -நோயாளிகள் அவதி
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்கு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு 5 மருத்துவா்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளாா். இவரும் சில சமயங்களில் சொந்த அலுவல் காரணமாக விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டால் செவிலியா்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை உள்ளது.
நோயாளிகளின் உடலை பரிசோதனை செய்து நோயின் தன்மைக்கேற்ப ஊசி, மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்கு பல நேரங்களில் மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், இரவு நேரங்களில் பணியில் மருத்துவா் இல்லாததால், தேள், பாம்பு கடிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாமல் செவிலியா்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனா். அப்போது வாகன வசதியை ஏற்படுத்தி ராமநாதபுரம் செல்வதற்குள் நோயாளி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனா். தற்போது மழைக் காலம் தொடங்கி இருப்பதால் ஆா்.எஸ். மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
மாவட்ட மருத்துவ அதிகாரியிடம், இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமனம் செய்வதுடன், இரவு நேரங்களில் ஒரு மருத்துவா் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்தப் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் புகாா் தெரிவித்தனா்.
எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கூடுதல் மருத்துவா்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.