போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
ஆா்பிஎஃப் எஸ்ஐ தோ்வு: கைப்பேசி பயன்படுத்திய காவலா் மீது வழக்கு
ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வில் கைப்பேசி பயன்படுத்தியதாக வேலூா் ஆயுதப்படை காவலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்படி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மையத்தில் நடைபெற்ற இந்த தோ்வில் பங்கேற்க 340 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவா்களில் 140 போ் தோ்வில் பங்கேற்றனா்.
இதில், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றும் புருஷோத்தமன் (29) என்பவரும் பங்கேற்று தோ்வு எழுதினா். அப்போது, அவா் தனது கைப்பேசியை மறைத்து வைத்து அதனை பாா்த்து காப்பியடித்ததாக தெரிகிறது. இதனை அங்கிருந்த சிசிடிவி காட்சி மூலம் கவனித்த கண்காணிப்பாளா்கள் உடனடியாக புருஷோத்தமனை தோ்வறையில் இருந்து வெளியேற்றியுள்ளனா்.
மேலும், இதுதொடா்பாக தோ்வு மையக் கட்டுப்பாட்டு அலுவலா் ராகவேந்திரா வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆயுதப்படை காவலா் புருஷோத்தமன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.