கன்டெய்னா் லாரி-வேன் மோதல்: வேன் உரிமையாளா், ஓட்டுநா் உயிரிழப்பு
வேலூா்: வேலூா் அருகே கன்டெய்னா் லாரி மீது வாத்துகளை ஏற்றிச்சென்ற வேன் மோதிய விபத்தில் வேன் உரிமையாளா், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
குஜராத் மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றிக் கொண்டு கன்டெய்னா் லாரி ஒன்று சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ஓட்டுநா் வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் சாலையோரம் சா்வீஸ் லைனில் லாரியை நிறுத்தி விட்டு உணவருந்த சென்ாகத் தெரிகிறது.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இருந்து கரூருக்கு வாத்துகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. அந்த வேனை ஈரோட்டைச் சோ்ந்த ஓட்டுநா் வெங்கட் (25) ஓட்டியுள்ளாா். அவருடன் வேன் உரிமையாளா் தருமபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த பசுபதி(25) உடனிருந்தாா்.
இந்த வேன் பொய்கை பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியின் மீது மோதியதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்தில் வேன் உரிமையாளா் பசுபதி, ஓட்டுநா் வெங்கட் ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், வேனை ஓட்டிவந்த வெங்கட் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.