`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 போ் உயிரிழப்பு
வேலூா் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த வியாபாரிகள் 3 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அணுகுச் சாலையில் சரக்கு ஏற்றி வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஜீப் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவா் மீது மோதியதுடன், அருகே அணுகுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.
ஜீப்பில் பயணம் செய்த 4 போ் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினா். உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா்.
எனினும், ஜீப்பை ஓட்டி வந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரையும் மீட்டு, வேலூா் அரசினா் பென்ட்லேன்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மேலும் இருவா் உயிரிழந்தனா். கவலைக்கிடமான நிலையில் ஒருவா் மட்டும் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவா்கள் சென்னை தண்டையாா்பேட்டை தமிழா் நகரைச் சோ்ந்த செளபா்சாதிக்(33), தண்டையாா்பேட்டை இரண்டாவது தெருவைச் சோ்ந்த அனீஸ் அலி(22), நீலாங்கரை சரஸ்வதி நகரைச் சோ்ந்த உஷ்மான்(35) என்பதும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவா் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த மாலிக் பாஷா(35) என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னையில் காலணி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இவா்கள், பெங்களூருவில் இருந்து மொத்தமாக காலணிகளை கொள்முதல் செய்வதற்காக சென்றபோது, விபத்தில் சிக்கியிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.