'இதுவரை கிடையாது; இனிமேலும் கிடையாது!’ - பாஜகவுடன் `கூட்டணி ஆட்சி’ கேள்விக்கு அதிமுக எம்பி தம்பிதுரை
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று இ.பி.எஸ் தனியாகத் தான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்பதற்கு இடமே கிடையாது'' என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தம்பிதுரை, " "தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டுமென்றால் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்னது காரணமாக கூட்டணி தொடர்பாக அத்வானி மற்றும் வாஜ்பாய் இடம் சென்று கூட்டணி குறித்து நானே பேசினேன்.

அதன் அடிப்படையில் தான் அப்போது கூட்டணி அமைக்கப்பட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் திமுக கூட்டணி அமைத்தார்கள். அது பொருந்தும் கூட்டணியா பொருந்தாத கூட்டணியா என ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்.
சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது திமுக கொள்கை. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியான முடிவு எடுத்திருக்கிறார். ஊழல் குறித்து அமித்ஷா சொல்லி இருக்கிறார். இது குறித்து ஏதும் வாய் திறக்காமல் திமுக இருக்கிறது.
தமிழக முதல்வர் தைரியம் இருந்தால், ஊழல் குறித்து பேசிய அமித் ஷா மீது வழக்கு தொடர தயாரா? இப்போது எடப்பாடி சரியான கூட்டணி அமைத்து இருக்கிறார். நாங்கள் கொள்கை கூட்டணியில் சிறப்பாக இருப்பவர்கள்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தனியாகத்தான் ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததும் கிடையாது. இனிமேல் வரப்போவதும் கிடையாது.

பாஜகவுடன் கூட்டணிதான், கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஒருபோதும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. இனியும் கூட்டணி ஆட்சி அமைக்கப்படாது." என்று தம்பிதுரை கூறியிருக்கிறார்.