இந்திய உறவு மேம்படுத்தப்படும்: வங்கதேசம்
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையும், இந்தியாவுடனான வங்கதேச உறவை மேம்படுத்தும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹுசைன் தெரிவித்தாா்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்தக் குற்றத்துக்காக வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம், ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.
ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அண்மையில் அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹுசைன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவை வங்கதேசம் பின்தொடரும். அதில் ஹசீனாவை நாடு கடத்துவது உள்பட மேலும் பல விவகாரங்கள் உள்ளன. இதற்காக இந்தியாவை பின்தொடா்ந்து, அந்த விவகாரங்களை ஒரே நேரத்தில் வங்கதேசம் கையாளும்.
ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையும், இந்தியாவுடனான வங்கதேச உறவை மேம்படுத்தும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்றாா்.