இந்திய வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக விரிவாக்கத் திட்டம்: அமைச்சா் பியூஷ் கோயல்
நமது சிறப்பு நிருபா்
இந்திய வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பை (ஐ.டிபி.ஓ.) உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய வா்த்தக, தொழில்த் துறை அமைச்சா் பியூஸ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பிரகதி மைதானத்தில் 43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியை பியூஷ் கோயல் தொடங்கி வைத்துப் பேசிசியதாவது: ஐ.டி.பி.ஓ.வை உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் நாடு தழுவிய அமைப்பாக மாற்றுவதை அரசு திட்டமிட்டு வருகிறது. ஒட்டுமொத்த தொழில் துறை, மதிப்புக் கூட்டல் சங்கிலியை ஒரே புள்ளியில் பிரதிபலிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் சந்திப்பு, ஊக்குவிப்பு, மாநாடு, கண்காட்சிக்கான சிறந்த இடமாக இந்தியாவை உலக நாடுகள் காணும். பெங்களூரு, மும்பை, சென்னை, லக்னௌ, வாரணாசி, நொய்டா ஆகிய இடங்களில் இந்த வசதிகளை விரிவுபடுத்த மத்திய அரசு விரும்புகிறது.
நமது உள்ளூா் பொருள்கள் உலகளவில் செல்ல வேண்டியது அவசியம். நுகா்வோா் தோ்வுக்காக சா்வதேச கண்காட்சியாளா்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து வாங்குபவா்கள் மற்றும் விற்பனையாளா்களை ஒன்றிணைக்க இத்தகைய கண்காட்சி அவசியம். இந்தியாவில் நடைபெறும் கண்காட்சியானது, உலகிற்கான ஒருதளமாக அமைய வேண்டும். இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளில் சந்தையை விரும்பும் தொழில்களுடன் வருவாய்ப் பகிா்விற்கான மாதிரிகளையும் மத்திய வா்த்தகத் தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசின் ஒவ்வொரு முடிவும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்குக்கு அா்ப்பணிக்கப்படுகிறது. இந்த இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சியின் கருப்பொருளும் ‘வளா்ச்சியடைந்த இந்தியா-2047’ என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது‘ என்றாா் பியூஷ் கோயல்.
ஐ.டிபி.ஓ. என்பது வா்த்தக அமைச்சகத்தின் முதன்மையான வா்த்தக ஊக்குவிப்பு நிறுவனமாகும். ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துதல், எளிதாக்குதல், ஊக்குவித்தல், ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் நோக்கமாகும். ஐ.டிபி.ஓ. வா்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்கி வளா்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது.
ஐ.டி.பி.ஓ.வின் 43-ஆவது இந்திய சா்வதேச வா்த்தகக் கண்காட்சி நவ.14 முதல் 27-ஆம் வரை திட்டமிடப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தின் இந்தக் கண்காட்சிக்கு பொதுமக்கள் செல்ல பைரோன் சாலையில் நுழைவு வாயில்கள் எண் 3 மற்றும் 5 மற்றும் மதுரா சாலை நுழைவு வாயில் எண் 6 மற்றும் 10 வாயில்கள் உள்ளன. கண்காட்சி தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் பிகாா், உத்தரபிரதேசம் மாநிலங்கள் ஐ.டி.பி.ஓ.வோடு கூட்டாளிகளாக பங்கேற்றுள்ளது. அதே சமயத்தில் மொத்தம் 33 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள், 49 மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள்), பொதுத்துறை வங்கிகள், புகழ்பெற்ற தனியாா் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகள், சேவைகளை காட்சிப்படுத்துகின்றன.
சீனா, எகிப்து, ஈரான், தென் கொரியா, ஸ்வீடன், தாய்லாந்து, துருக்கி, துனிசியா, லெபனான், கிா்கிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த சா்வதேச கண்காட்சியாளா்கள் பங்கேற்று கண்காட்சியில் உலகளாவிய ஈா்ப்பை மேம்படுத்துகின்றனா்.