இந்தியா - இலங்கை தொலைநோக்கு திட்டம்: அதிபா் அநுர குமார அமல்படுத்த விக்ரமசிங்க வலியுறுத்தல்
இந்தியாவுடன் கடந்தாண்டு கையொப்பமிடப்பட்ட ‘தொலைநோக்கு திட்டத்தை’ புதிய அதிபா் அநுரகுமார திசாநாயக முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இலங்கையில், கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசாநாயக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விக்ரமசிங்க பேசியதாவது:
எரிசக்தி, வா்த்தகம், கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கிடையேயான தொலைநோக்கு திட்டத்தில் கடந்தாண்டு நானும் பிரதமா் மோடியும் கையொப்பமிட்டோம். இதை முழுமையாக அநுர குமார திசாநாயக அமல்படுத்த வேண்டும்’ என்றாா்.
மேலும், கடும் பொருளாதார சரிவில் இலங்கை சிக்கியிருந்தபோது உதவிய பிரதமா் மோடிக்கும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கும் அவா் நன்றியைத் தெரிவித்தாா்.