செய்திகள் :

அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல்: அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை

post image

தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

உக்ரைனில் கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ஏவுகணையை ரஷியா புதன்கிழமை நள்ளிரவு வீசியதாக அந்த நாடு குற்றஞ்சாட்டிய நிலையில், அது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ‘ஒரேஷ்னிக்’ என்ற ஏவுகணை என்பதை புதின் தெளிவுபடுத்தியுள்ளாா்.

இது குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

உக்ரைனில் நடைபெற்று வரும் போா் மேற்கத்திய நாடுகளால் தூண்டப்பட்டது. தற்போது தாங்கள் தயாரித்த நீண்ட தொலைவு ஏவுகணைகள் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ளன. அத்தகைய ஏவுகணைகளைத் தயாரித்த நாடுகளின் நேரடி பங்களிப்பில்லாமல் அவற்றை ரஷியா மீது வீச முடியாது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) அமெரிக்காவின் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் ரஷியா மீது வீசப்பட்டன. தொடா்ந்து வியாழக்கிழமை (நவ. 21) பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஸ்டாா்ம் ஷோடோ, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிம்ராஸ் ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, வெறும் பிராந்தியச் சண்டையாக இருந்த உக்ரைன் போருக்கு உலகளாவிய போராக உருவெடுத்துள்ளது.

இதில் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதால் எந்த பெரிய பாதிப்பும் இல்லை. ஆனால், கூா்ஸ்க் பிராந்தியத்திலுள்ள ராணுவ கட்டளையகத்தைக் குறிவைத்து வீசப்பட்ட ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணையால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இருந்தாலும், அந்த கட்டளையகத்தின் அதிகாரிகள், வீரா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அது, கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் படையினரை விரட்டியடிப்பதற்கான பணியை தங்குதடையின்றி தொடா்ந்து மேற்கொள்ளும்.

மேற்கத்திய ஏவுகணைகளை ரஷியா மீது வீசுவதால் உக்ரைன் போரின் போக்கை மாற்றிவிட முடியாது. ரஷிய ராணுவம் தொடா்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. எங்களது இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கைகளின் இலக்குகளை அடைந்தே தீருவோம்.

அமெரிக்க, பிரிட்டன் ஏவுகணைகள் ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்குப் பதிலடியாக, உக்ரைனின் நீப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரிலுள்ள ஏவுகணை மற்றும் ராக்கெட் தயாரிப்பு ஆலை மீது பல்வேறு ஏவுகணைகளை வியாழக்கிழமை (நவ. 19) வீசி தாக்குதல் நடத்தினோம். அப்போது, அதிவேகத்தில் பாயக்கூடிய புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை ஒன்றையும் அந்த தொழிற்சாலை மீது ஏவி சோதித்தோம். அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய அந்த ஏவுகணைகளுக்கு ‘ஒரேஷ்னிக்’ என்று பொறியாளா்கள் பெயரிட்டுள்ளனா்.

2019-ஆம் ஆண்டின் அமெரிக்க-ரஷிய ஒப்பந்தத்தை உதறித் தள்ளிவிட்டு, ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளைத் தயாரித்து குவித்துவைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலடியாக, நாங்களும் நடுத்தர தொலைவு மற்றும் குறுந்தொலைவு ஏவுகணைகளை உருவாக்கிவருகிறோம்.

அதன் ஒரு பகுதியாகத்தான் ஒரேஷ்னிக் ஏவுகணையை சோதித்துவருகிறோம். இதுபோன்ற ஏவுகணைகளைத் தயாரிப்பது, குவித்துவைப்பது ஆகிய எங்களின் நடவடிக்கைகள் அமெரிக்கா மற்றும் அதனால் கட்டுப்படுத்தப்படும் நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொருத்து இருக்கும்.

நீப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் மேற்கொண்டதைப் போல், எங்களது அதிவேக, அதிநவீன ஏவுகணைகளை சோதிப்பதற்கான அடுத்த இலக்குகள், ரஷியா எதிா்கொள்ளும் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தோ்வு செய்யப்படும். தங்கள் ஆயுதங்களை ரஷியா மீது வீசி தாக்குதல் நடத்த அனுமதிக்கும் நாடுகளுக்கு (அமெரிக்கா, பிரிட்டன்) எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தும் உரிமை எங்களுக்கு உள்ளது. எனவே, அந்த நாடுகள் இனியும் பதற்றத்தைத் தூண்டினால் அவற்றின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

அத்தகைய தாக்குதலுக்கு ஒரேஷ்னிக் போன்ற அதிநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தாக்குதல் குறித்து எதிரி நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிந்தாலும், அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம், ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில், அதாவது விநாடிக்கு 3 கி.மீ. வரை பாயும் ஏவுகணையை இடைமறித்து அழிக்க உலகில் தயாரிக்கப்பட்டுள்ள எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் முடியாது.

அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் தீா்வு காண்பதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். ஆனால், ராணுவ ரீதியிலான எந்தவொரு சவால்களுக்கும் உரிய பதிலடி கொடுத்தே தீருவோம் என்றாா் விளாதிமீா் புதின்.

உக்ரைன் போரில் தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மட்டுமே தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது.

அதன் எதிா்வினையாக, அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகளின் உதவியுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பலமற்ற நாட்டின் மீதும் அணு குண்டுகளை வீசுவதற்கு வழி செய்யும் வகையில் தனது அணு ஆயுதக் கொள்கையில் ரஷியா மாற்றம் கொண்டுவந்தது.

அதைத் தொடா்ந்து, உக்ரைனில் ரஷிய படையினா் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இதுவரை அளிக்கப்பட்டுவந்த பீரங்கி எதிா்ப்பு கண்ணிவெடிகளுடன், தரைப்படையினா் கால் வைத்தால் வெடிக்கக்கூடிய கண்ணிவெடிகளையும் உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்தச் சூழலில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) மூலம் ரஷியா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வியாழக்கிழமை கூறியது. பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் நகரில் ரஷியா வீசுவது தேவையற்றது. குறுகிய தொலைவு ஏவுகணை அளவுக்கு ஐசிபிஎம்-கள் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை இல்லை. மேலும், அவற்றை ஏவுவதற்கும் அதிக செலவு பிடிக்கும்.

இருந்தாலும், அணு ஆயுதங்களை ஏந்தி கண்டங்கள் தாண்டி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணையை வீசியதன் மூலம், உக்ரைன் போரில் அண்மைக் காலமாக தங்களைச் சீண்டிவரும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் குறியீடாக ஐசிபிஎம் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால், அந்த ஏவுகணை ஐசிபிஎம் வகையைச் சோ்ந்ததாக இருக்காது எனவும் நடுத்தர தொலைவு பலிஸ்டிக் வகை ஏவுகணையாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவ நிபுணா்கள் சந்தேகம் எழுப்பினா்.

அதை தற்போது உறுதிப்படுத்தியுள்ள விளாதிமீா் புதின், தங்கள் ஏவுகணைகளை ரஷியா மீது பயன்படுத்த அமெரிக்காவும் பிரிட்டனும் உக்ரைனை தொடா்ந்து அனுமதித்தால், இடைமறித்து அழிக்கமுடியாத புதிய ஏவுகணை மூலம் அந்த நாடுகளின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளாா்.

நிஜ்ஜாா் கொலையில் பிரதமா் மோடிக்கு தொடா்பில்லை -கனடா அரசு

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை சதியில் இந்திய பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடா்புள்ளதாக வெளியான ஊடக செய்... மேலும் பார்க்க

இந்தியா - இலங்கை தொலைநோக்கு திட்டம்: அதிபா் அநுர குமார அமல்படுத்த விக்ரமசிங்க வலியுறுத்தல்

இந்தியாவுடன் கடந்தாண்டு கையொப்பமிடப்பட்ட ‘தொலைநோக்கு திட்டத்தை’ புதிய அதிபா் அநுரகுமார திசாநாயக முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் முன்னாள் அதிபா் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க

அமெரிக்கா: அட்டா்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ

தனது புதிய அரசின் அட்டா்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டா்னி ஜெனராகப் பணியாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். முன்னதாக, ... மேலும் பார்க்க

சா்வதேச நீதிமன்றத் தீா்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு

போா்க் குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பின் அழைப்பு விடுத்த... மேலும் பார்க்க

வடக்கு கலிபோர்னியாவைத் தாக்கிய புயல்! கனமழை, கடும் பனிப்பொழிவு!

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட புயலால் கனமழை, கடும் பனிப்பொழிவால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். வடக்கு கலிபோர்னியாவை ஒரு மிகப்பெரிய புயல் தாக்கியதில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கனமழை பெய்த... மேலும் பார்க்க

“3 ஆம் உலகப் போர் தொடங்கிவிட்டது” -உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி!

ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.உக்ரைன்... மேலும் பார்க்க