மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!
இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்திகள் நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்
இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான(ஓபிசி) தலைமைத்துவ மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது: “இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குகிறார்கள். ஆனால், இந்த மக்களுக்கு அவர்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை. ஓபிசி பிரிவினரின் வரலாற்றை ஆர்எஸ்எஸ், பாஜக அழித்துவிட்டது.
தெலங்கானாவில் எந்தவொரு ஓபிசி, தலித், பழங்குடியினரும் கார்ப்பரேட் நிறுவனம் அளவுக்கு சம்பளம் பெறவில்லை. அவர்கள் எல்லாம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பியே வாழ்கின்றனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாதிருந்ததற்கு நானே முக்கிய காரணம், அதற்கு காங்கிரஸ் பொறுப்பாகாது. இந்தநிலையில், காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு விரிவாக எடுக்கப்படும்.
ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல் சில காலம் நான் பின்தங்கிவிட்டேன். அதற்கான முக்கியத்துவத்தை அளிக்காமல் விட்டுவிட்டேன். இதற்காக வருந்துகிறேன். நாட்டின் ஆக்கப்பூர்வ சக்திகளுக்கு மரியாதை தர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்” என்றார்.