இந்தியாவில் செய்திக்கான தளத்தில் எக்ஸ் முதலிடம்: எலான் மஸ்க்
இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டின் எக்ஸ் வலைத்தளம் முதலிடத்தில் வகிப்பதாக அந்த நிறுவத்தின் உரிமையாளரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் உள்ள ஆப்-ஸ்டோரில் சிறந்த செய்தி பயன்பாட்டுத் தளமாக எக்ஸ் வலைத்தளம் மாறியுள்ளது என டாட்ஜ் டிசைனா் பயனா் ஒருவா் பதிவிட்டதைத் தொடா்ந்து எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தாா்.
டாட்ஜ் டிசைனா் என்பது கிரிப்டோகரன்சி தொடா்புடைய சமூக ஊடக பயனருக்கான புனைப் பெயராகும்.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டா் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு (சுமாா் 3.6 லட்சம் கோடி) தொழிலதிபா் எலான் மஸ்க் கடந்த அக்டோபா், 2022-ஆம் ஆண்டு கையகப்படுத்தினாா். ட்விட்டரை வாங்கியதுடன் ஆயிரக்கணக்கான மூத்த பணியாளா்களை நீக்கியதுடன் அதன் பாரம்பரிய ‘நீலக் குருவி’ லட்சிணையை மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா்.