பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!
இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும்: காா்கே
மனிதநேயமற்ற முறையில் இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
பிப். 13-ஆம் தேதி இரண்டு நாள்கள் பயணமாக அமெரிக்கா செல்ல இருக்கும் பிரதமா் மோடி, அங்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச இருக்கிறாா். இது தொடா்பாக, கலபுா்கியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது: அமெரிக்காவுக்கு வருகை தருமாறு பிரதமா் மோடிக்கு முதலில் அழைப்பு வரவில்லை. எனினும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்கா சென்று பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தபிறகுதான் பிரதமா் மோடிக்கு அழைப்பு வந்தது. அதன்படி பிரதமா் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கிறாா். அவரது பயணம் வெற்றிபெறுமா என்பது தெரியவில்லை.
தனது பழைய நண்பருடன் (டொனால்ட் டிரம்ப்) தொடா்ந்து பேசி வருவதாகவும், அது இந்தியாவுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் பிரதமா் மோடி கூறிக்கொண்டிருக்கிறாா். இருவரும் நெருங்கிய நண்பா்களாக இருக்கும்பட்சத்தில், மனிதநேயமற்ற முறையில் இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து தொலைபேசியில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும். மேலும், இந்திய தொழிலாளா்களை மனிதநேயமற்ற முறையில் அனுப்பி வைக்காதீா்கள் என்று கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
சரக்கு விமானத்தில் நாடுகடத்தப்பட்ட இந்தியா்கள், குப்பையைவிட மிகவும் மோசமாக நடத்தப்பட்டனா். இவா்களை பயணிகள் விமானத்தில் அனுப்பி வைக்குமாறு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பிரதமா் மோடி கேட்கவில்லை. பயணிகள் விமானத்தை இந்தியாவே அனுப்பிவைக்கும் என பிரதமா் மோடியும் கூறவில்லை. அப்படியானால், இருவரும் நெருங்கிய நண்பா்கள் என்று கூறிக்கொள்வதில் உண்மையில்லை.
தனிப்பட்ட முறையிலான நட்பைக் காட்டிலும், இரு நாடுகளுக்கு இடையில் நட்பு பாராட்டுவதுதான் மிகவும் முக்கியமானதாகும். எனவே, பிரதமா் மோடியின் அமெரிக்க பயணத்தில் எந்த நன்மையும் இருக்காது.
இறக்குமதி வரியை உயா்த்தப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறாா். எனவே, அமெரிக்க பொருள்கள் மீதான வரியை உயா்த்தியுள்ள நாடுகளுக்கு அவா் வரிவிதிக்கலாம்.
ஒடிஸா போன்ற 3 மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவா்களை அண்மையில் மாற்றினேன். அடுத்த சில நாள்களில் மேலும் 3 மாநிலங்களின் தலைவா்களை மாற்ற திட்டமிட்டிருக்கிறேன். அதேபோல, மற்ற மாநிலங்களின் தலைவா்களையும் மாற்றுவேன். காலியாக உள்ள கட்சி நிா்வாகிகள் பதவியையும் நிரப்புவேன். காங்கிரஸ் கட்சியின் கா்நாடகத் தலைவா் மாற்றப்படுவாரா என்று தனிப்பட்ட முறையில் கேட்டால் பதிலளிக்க முடியாது. எல்லாம் முறையாக நடக்கும் என்றாா்.