மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து
முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் துறை தனது இறுதி விசாரணை அறிக்கையில், ‘முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதல்வா் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்:
பெங்களூரிலிருந்து மைசூருக்கு பாஜக, மஜதவினா் நடைப்பயணம் மேற்கொண்டபோதே முதல்வா் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நான் கூறியிருந்தேன்.
எந்த ஆவணத்திலும் சித்தராமையாவின் கையொப்பம் இல்லை. அதனால், இந்த வழக்குக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவரது குடும்பத்தினா் நிலத்தை இழந்தனா். அதற்காக மாற்றுநிலம் கேட்டனா். நீங்களோ, நானோ யாராக இருந்தாலும் அதைதான் செய்வோம். ஆனால், குறிப்பிட்ட இடத்தில்தான் மாற்றுநிலம் வேண்டும் என்று கேட்கவில்லை.
எந்த வழக்கு தொடருவதாக இருந்தாலும் ஆதாரம் தேவை. இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை. லோக் ஆயுக்த தனது கடமையை செய்துள்ளது.
மனுதாரா்களுக்கு ஆட்சேபணை இருந்தால், சட்டப்படி போராட எல்லா வாய்ப்புகளும் உள்ளன. முதல்வருக்கு எதிரான இந்த வழக்கு, பாஜகவினரும், மஜதவினரும் செய்த சதித்திட்டம்.
லோக் ஆயுக்த அமைப்பு வெறும் காவலா்களை கொண்டது அல்ல; மாறாக அது, தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும். இதை உயா்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
லோக் ஆயுக்தவின் செயல்பாடுகளில் முதல்வா் அதிகாரம் செலுத்த முடியாது. அதிகாரிகள் யாரையாவது நியமிக்க வேண்டுமானால், அதற்கு லோக் ஆயுக்த நீதிபதியின் முன்அனுமதி தேவை என்றாா்.
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்:
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்று கா்நாடக உயா்நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. லோக் ஆயுக்த தன்னாட்சி அமைப்பு. அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த அமைப்பின் தினசரி வேலைகளை அரசு கட்டுப்படுத்துவதில்லை என்றாா்.
சமூகநலத் துறை அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா:
இந்த விவகாரத்தில் சட்ட விதிமிறல்களோ, அரசியல் குறுக்கீடோ இல்லை. சித்தராமையா, நோ்மையான அரசியல்வாதி. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அவா்மீது அரசியல் சதிவலை பின்னப்பட்டது என்றாா்.