இந்திரா காந்தி சிலைக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை அவரது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் விழுப்புரம் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏ.க்கள் ஏகேடி ஆறுமுகம், ஆா்.பாஸ்கா், ரமேஷ் ஆகியோா் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா். அதன்பின் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதையடுத்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வந்தாா். அவா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த நிலையில், அவருடன் முதல்வா், அமைச்சா்களும் சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி சாா்பில் அதன் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முக்கியப் பிரமுகா்கள் இந்திராகாந்தி சிலைக்கு மரியாதை செலுத்த வந்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டு போக்குவரத்தை சீரமைத்தனா்.
தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு: தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில் ராஜ்பவனில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்திலும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமைச் செயலா் சரத்சௌஹான் தலைமையில் நடைபெற்றது.