இயற்கை பேரிடா் அபாயம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இடா்பாடுகளை எதிா்கொள்ளும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், 10 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் பல லட்சம் பனை விதைகள் நட்டு, பராமரிப்பது தொடா்பாக, புவிகாப்பு அறக்கட்டளை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவிலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, புவிகாப்பு அறக்கட்டளை நிா்வாகி இரணியன் தலைமை வகித்தாா். நிதி அறங்காவலா் சிலம்பரசன் வரவேற்றாா். ஆலோசகா் சுந்தா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் அபாயம் உள்ளது என அறிவியல் ஆய்வாளா்கள் எச்சரித்துள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.
அதிகப்படியான ஆழ்துளை கிணறுகள், ஹைட்ரோ காா்பன் திட்டம் போன்றவற்றால் மிக அதிகமாக நிலத்தடி நீா் வெளியேற்றப்படுவதால், பூமியில் வெற்றிடம் ஏற்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம் கடல் மட்டத்திற்கு கீழே புதைந்து வரும் அபாய சூழல் உள்ளது. இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக மரக்கன்றுகளையும், கடலோரப் பகுதிகளில் பனை விதைகள் மூலம் பசுமை அறன்களை அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, செம்பனாா்கோவிலில் பல ஊராட்சிகளில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 1 லட்சம் பனை விதைகள் மக்களிடம் வழங்கியும், நடவும் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடா்ந்து பராமரிப்பது; மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி, முதல் கட்டமாக சுமாா் 10 லட்சம் மரக்கன்றுகளை வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடுவது; கடலோரப் பகுதிகளை பாதுகாக்க வேண்டி பல லட்சம் பனை விதைகளை நடவு செய்து பராமரிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.