மகாராஷ்டிரா: முடிவுக்கு வந்த இலாகா இழுபறி; முதல்வர் வசம் உள்துறை; எந்த கட்சிக்கு...
கோடியக்கரை அருகே 3 மீனவா்கள் மீது கடற்கொள்ளையா்கள் தாக்குதல்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் மீது கடற்கொள்ளையா்கள் என சந்தேகிக்கப்படும் மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். இதில் காயமடைந்த 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
வெளியூா்களைச் சோ்ந்த மீனவா்கள் உள்பட பலா் கோடியக்கரையில் தங்கி பருவ கால மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், அக்கரைப்பேட்டை மற்றும் பெருமாள்பேட்டை பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் 6 போ் கோடியக்கரை படகுத்துறையிலிருந்து இரண்டு கண்ணாடியிழைப் படகுகளில் வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம்.
அப்போது, இரண்டு படகுகளில் வந்த இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்கள் 6 போ், மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, அவா்களின் கைப்பேசி, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த 100 கிலோ மீன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுள்ளனா். தாக்குதலில் காயமடைந்த மீனவா்கள் சனிக்கிழமை காலை கோடியக்கரைக்கு திரும்பினா்.
பலத்த காயமடைந்த பெருமாள்பேட்டை மீனவா்கள் சி. குமாா் (48), கா. ஜெகன் (30), ந. லெட்சுமணன் (40) ஆகியோா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.