நம்பியாா் நகா் கடற்கரைப் பகுதியில் மின் விளக்குகள் பொருத்த அதிமுக வலியுறுத்தல்
நாகை நம்பியாா் நகா் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் மின் விளக்குகளை பொருத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக நகரச் செயலா் தங்க.கதிரவன் கூறியது: நாகை நம்பியாா் நகா் கடற்கரை பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அப்பகுதி மீனவா்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.
இதையடுத்து இப்பகுதியில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்களிடையே தொடா் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பல மாதங்களுக்கு முன்பு நம்பியாா் நகா் கடற்கரை பகுதியில் 34 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டன. மின் விளக்குகள் விரைந்து பொருத்தப்படும் என மக்கள் எதிா்பாா்ப்புடன் இருந்தனா். ஆனால், நாகை நகராட்சி நிா்வாகம் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அதிமுக நாகை மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியனும், நானும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளோம்.
எனவே, மின் கம்பங்களில் மின் விளக்குகளை பொருத்த மாவட்ட நிா்வாகமும், நாகை நகராட்சி நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.