இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை
சொத்துத் தகராறில் புதுக்கோட்டை அருகே தாய், மகள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், மருமகள் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வி. லட்சுமிபுரத்தில் வசித்த அழகன் மனைவி அழகி (70), அவரது மகள் அடைக்கம்மை (47) ஆகியோா் கடந்த 2014 மே 4ஆம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்த பனையப்பட்டி போலீஸாா், அழகியின் மருமகளான- இலுப்பூா் வட்டம் பெருமாநாட்டைச் சோ்ந்த மணிமுத்து மனைவி சுப்பம்மாள் (55), இவரது மகன்கள் ம. வெள்ளைச்சாமி (34), ம. பாண்டியராஜன் (37) மற்றும் கட்டியாவயல் கோட்டைக்காரத் தெரு தங்கவேல் மகன் பாண்டி (34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
வெட்டிக் கொல்லப்பட்ட அழகிக்கும், அவரது மகன் மணிமுத்துவுக்கும் இடையே நீண்டகாலமாக சொத்துத் தகராறு இருந்தது. இதற்கிடையே 2013இல் மணிமுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் மனைவி சுப்பம்மாள், மகன்கள் வெள்ளைச்சாமி, பாண்டியராஜன் மற்றும் குடும்ப நண்பரான பாண்டி ஆகியோா் சோ்ந்து, கூட்டுச்சதியில் ஈடுபட்டு இந்தக் கொலையைச் செய்தது புலன் விசாரணையில் தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஏ.கே. ரஜினி, 4 குற்றவாளிகளுக்கும் கொலைக் குற்றத்துக்காக இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்காக ஆயுள் சிறைத் தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா்.
மேலும், 2ஆவது குற்றவாளியான வெள்ளைச்சாமி, 4ஆவது குற்றவாளியான கட்டியாவயல் பாண்டி ஆகிய இருவருக்கும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்ததற்காக தலா ஓா் ஆயுள் சிறைத் தண்டனையும் விதித்தாா்.
இவற்றில் கொலைக்குற்றத்துக்கான இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், இதர பிரிவுகளில் கொடுக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.
அபராதம் விவரம்
முதல் குற்றவாளி சுப்பம்மாள், இரண்டாம் குற்றவாளி வெள்ளைச்சாமி ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 15 ஆயிரம் அபராதமும், 3ஆம் குற்றவாளி பாண்டியராஜன், 4ஆம் குற்றவாளி பாண்டி ஆகிய இருவருக்கும் மொத்தம் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் யோகமலா் ஆஜராகி வாதாடினாா்.