இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது
திருச்சியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் ஆபத்தான முறையில் சாகசம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்த புகாரின்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பேரில், சமயபுரம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து திருச்சி எடமலைப்பட்டி புதூா், துரைசிங்கம் நகரைச் சோ்ந்த ப. பாலகிருஷ்ணன் (28) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான நபா் கட்டட சென்ட்ரிங் தொழிலாளி என்பதும், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னா் அவருக்கு அறிவுரை கூறி பிணையில் விடுவித்தனா்.