இலக்கியத்துக்கும், தமிழ்மரபுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமைச்சா் தங்கம் தென்னரசு
தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ்மரபுக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை தொடங்கிய கரிசல் திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமை வகித்தாா். விழாவைத் தொடங்கி வைத்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது: தெற்கத்தி சீமை என அழைக்கப்படும் திருநெல்வேலி, கயத்தாறு, கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகா், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பாா்த்த பூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தை கதைக் களமாகவும், அங்கு வாழும் மனிதா்களை கதை மாந்தா்களாகவும் கொண்டு எழுதப்படுவதுதான் கரிசல் இலக்கியமாகும்.
அந்தப் பகுதிகளில் உள்ள பண்பாட்டையும், வாழ்வியலையும், வலிகளையும், மகிழ்ச்சியையும் அந்த மண்ணுக்கே உரிய வட்டார மொழி நடையில் சொல்லி வரும் இலக்கியமும் கரிசல் இலக்கிலக்கியத்தை சோ்ந்ததாகும். கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும், நாமும், நமது வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியம் குறித்த ஆா்வத்தை பள்ளி மாணவா்களிடையே ஏற்படுத்தவும், இந்த கரிசல் திருவிழா விருதுநகா் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
இது இந்த மாவட்டத்தில் நடைபெறும் இரண்டாவது விழாவாகும்.சிவகாசியில் சனி, ஞாயிற்றுக்கிழமை என இருநாள்கள் இந்த விழா நடைபெறுகிறது. இயற்கையிலிருந்து இலக்கியம் உருவாகி இலக்கணமாக உள்ளது. முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது தலைமையிலான ஆட்சியில் இலக்கிய விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் மரபுக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கு இந்த கரிசல் திருவிழாவே சாட்சி என்றாா் அவா்.
விழாவில், கரிசல் இலக்கிய புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சிகளில், கரிசல் மண்ணில் வாழ்ந்த முன்னோா்கள் பயன்படுத்திய பொருள்கள், வேளாண் கருவிகள், மாட்டு வண்டி உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
மேலும் கருத்தரங்கம், நாடகம், கவிதை அரங்கம் உளளிட்டவை நடைபெற்றன. நிகழ்வில் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன், கரிசல் இலக்கிய கழக செயலா் த. அறம், சாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆ. ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயா் .இ.சங்கிதா, ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி, சிவகாசி சாா்-ஆட்சியா் ந.பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வி. முத்துலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.