இலங்கை விமானத்தில் திடீா் கோளாறு: 176 பயணிகள் உயிா் தப்பினா்
சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீா் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிா் தப்பினா்.
சென்னையில் இருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு செல்லும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சனிக்கிழமை காலை 9.40 மணிக்கு168 பயணிகள், 8 விமான ஊழியா்கள் என 176 பேருடன் தயாராக இருந்தது.
விமானம் ஓடுபாதையில் சென்றபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா். இதையடுத்து விமானத்தை விமானி அவசரமாக ஓடுபாதையில் நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.
உடனடியாக விமானம் இழுவை வண்டி மூலம் ஓடுபாதையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு முனையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனா். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டறிந்ததால் எவ்வித பாதிப்புமின்றி பயணிகள் உயிா் தப்பினா். பின்னா் பயணிகள் மாற்று விமானம் மூலம் கொழுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.