PVR : 25 நிமிடங்கள் நீடித்த விளம்பரம்; பி.வி.ஆருக்கு ரூ.1,28,000 அபராதம் - நுகர்வோர் மன்றம் அதிரடி!
பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பி.வி.ஆர் சினிமாஸ் நிர்வாகம், சரியாக திரைப்படம் தொடங்கும் நேரத்தை டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இப்போது பெரும்பாலான தியேட்டர்கள் பி.வி.ஆர் நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதனால், படம் தொடங்குவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் இருந்து 20 நிமிடங்கள் வரை விளம்பரங்கள் போடப்படுவதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அது கொஞ்சம் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் எப்போதுதான் திரைப்படம் தொடங்கும் என சற்றே விரக்தியடைவதும் உண்டு.
அந்த வகையில், அபிஷேக் எம்.ஆர் என்ற நபர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இழப்பீடும் பெற்றுள்ளார்.
அவர் சாம் பகதூர் திரைப்படத்துக்கு டிசம்பர் 26, 2023 தேதியில் டிக்கெட் புக் செய்திருக்கிறார். பெங்களூரு ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர் ஐநாக்ஸ் தியேட்டரில் 4:05 மணிக்குத் திரைப்படம் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் திரைப்படம் சரியாக 4:30க்குத் தான் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 25 நிமிடங்களுக்கு ட்ரெய்லர்களும், விளம்பரங்களும் போடப்பட்டிருக்கின்றன.
இது குறித்து விசாரணை நடத்திய நுகர்வோர் மன்றம், திரைப்படம் போடுவதற்கு முன்பு போடப்பட்டதில் 95 விழுக்காடு விளம்பரங்கள் தனியார் புரொமோஷன்கள். அரசு அறிவுறுத்திய விஷயங்கள் அல்ல. இப்படி போடப்படும் விளம்பரங்கள் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியது.
அதிகப்படியான விளம்பரங்கள் தாமதமாக வருபவர்களுக்கு உதவும் என்றும், சரியான நேரத்துக்கு வருபவர்கள் திரைப்படம் தொடங்கும் வரை ஸ்க்ரீன் முன்னால் அமர்ந்திருக்க அவசியம் இல்லை என்றும் வாதாடியது பி.வி.ஆர். ஆனால் இவற்றை சரியான காரணங்களாக நுகர்வோர் மன்றம் எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் பி.வி.ஆர் நிர்வாகம், புகார்தாரர் விளம்பரங்களைப் படம்பிடித்ததன் மூலம், பைரசி தடுப்பு சட்டங்களை மீறியதாக குற்றம்சாட்டியது. ஆனால் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பைரசி ஆகாது என மறுத்துவிட்டது நீதிமன்றம்.

மேலும், "இந்த புதிய யுகத்தில் நேரம்தான் பணம். ஒவ்வொருவரின் நேரமும் மதிப்புமிக்கது. ஒருவரின் நேரத்தை பறித்து பணம் சம்பாதிக்க யாருக்கும் உரிமையில்லை" எனக் குறிப்பிட்டது.
"நெருக்கமான கால அட்டவணையுடன் பிஸியாக இருக்கும் நபர்கள் தேவையில்லாத விளம்பரங்களைப் பார்ப்பது மிகவும் கடினமானது. குடும்பங்கள் நண்பர்களுடன் ரிலாக்ஸாக படம் பார்க்க வருவதனால் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என அர்த்தம் கிடையாது" என நுகர்வோர் குறைதீர் ஆணையம் கூறியுள்ளது.
இறுதியாக இனிமேல் திரைப்படம் போடுவதற்கு முன்பு விளம்பரங்கள், ட்ரெய்லர்கள் போடும் நேரத்தைக் குறிப்பிடாமல் சரியாக திரைப்படம் ஆரம்பிக்கும் நேரத்தைக் குறிப்பிட வேண்டும் எனக் கூறியுள்ளது நீதிமன்றம்.
மேலும், புகார்தாரருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20,000 மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.8,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 1,00,000 அபராதம் விதித்து, அதனை நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பணத்தை 30 நாள்களுக்குள் கட்டவில்லை என்றால் வருடத்துக்கு 10% வட்டி போடப்படும் என்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.