விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார்.
சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play