Odisha: ஒரே பத்ம ஶ்ரீ விருதுக்கு உரிமை கோரும் இரண்டு நபர்கள்; யார் உண்மையான அந்தர்யாமி மிஸ்ரா?
ஒரிசா உயர் நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்தித்துள்ளது. 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம ஶ்ரீ விருதை, இரண்டு நபர்கள் `எனது... எனது' என்று கருதுவதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
விருது யாருடையது எனத் தீர்மானிக்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் நீதிமன்றம், பிப்ரவரி 24ம் தேதி இரண்டு தரப்பினரையும் நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.
2023ம் ஆண்டு அந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயருள்ளவருக்கு கல்வி மற்றும் இலக்கியத்தில் அவரது பங்களிப்புக்காக பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்தர்யாமி மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் டெல்லி சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பத்மஶ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
ஆனால், அந்தர்யாமி மிஸ்ரா என்ற மருத்துவர் ஒடிசா உயர் நீதிமன்றத்தை நாடி, தனது பெயரைக் கொண்ட ஒருவர் விருது பெறுவதற்காக தன்னைப்போல ஆள் மாறாட்டம் செய்ததாக வழக்கு தொடுத்தபோதுதான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/mvbd55fc/Newssense-article-2025-02-15T124538.120.png)
நீதிமன்றத்தில் அவர் அளித்த மனுவில் ஓடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும், அதனால் தனது பெயரே விருது பட்டியலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் பத்திரிகையாளர் அந்தர்யாமி மிஸ்ரா எந்த புத்தகத்தையும் எழுதிமுடிக்கவில்லை என்பதையும் கோரியுள்ளார்.
பத்மஶ்ரீ போன்ற கௌரவங்களை வழங்கும் முன்னர் , அரசு கடுமையான சரிபார்ப்புகளை மேற்கொண்டாலும், ஒரே பெயர் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி அடுத்த விசாரணைக்கு ஆஜராகும்போது இரண்டு தரப்பினரும் தங்களது வெளியீடுகள் மற்றும் ஆதாரமான பொருள்களை எடுத்துவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய இருவருக்கும், மத்திய அரசுக்கும் இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவரான மிஸ்ரா இந்தியா டுடேயில் பேசும்போது, "ஜனவரி 25, 2023ல் எனக்கு மத்திய அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் என்னை வாழ்த்தினர், நான் விருதை பெற்றுக்கொள்வேனா எனக் கேட்டனர். நான் மகிழ்ச்சியாக பெற்றுக்கொள்வேன் என்று கூறினேன்." என்றார்.
President Droupadi Murmu presents Padma Shri to Dr Antaryami Mishra for Literature & Education. A distinguished Odia litterateur, Dr Mishra has been contributing to the study of Odia language, grammar culture and history for nearly five decades. pic.twitter.com/CzILTH8owe
— President of India (@rashtrapatibhvn) April 5, 2023
மேலும், "நானும் என் குடும்பத்தினரும் விருது குறித்து மகிழ்ச்சியாக இருந்தோம். விருது நிகழ்வில் ஒடிசா முதலமைச்சர் அருகில் வேறோரு அந்தர்யாமி மிஸ்ரா அமர்ந்திருந்தார். நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் செய்தித்தாள்களிலும் தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தர்யாமி மிஸ்ரா பத்ம விருதைப் பெற்றதாக பார்த்தோம்.
இதில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து உள்துறை அமைச்சக இணை இயக்குநர் அலுவலகத்தில் முறையிட்டோம். ஆனால் எங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவில்லை.
ஒடிசாவின் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரலிடமிருந்து முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் நான் விருதைப் பெறவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் கேட்டுப்பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம்." எனக் கூறியுள்ளார்.
பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா கூறியதாவது, "புபனேஸ்வரில் இருக்கும் மற்றொரு அந்தர்யாமி மிஸ்ரா யாரென்றே எனக்குத் தெரியாது. அவருக்கு அதிகாரிகளிடம் எதாவது கேள்வி இருந்தால் உயரதிகாரிகளிடம் சென்று கேட்க வேண்டும். நான் மாற்றுத்திறனாளி என்னால் எங்கும் நகர முடியாது.
இப்போது விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. அவரிடம் ஏதாவது சட்டப்பூர்வமான ஆதாரம் இருந்தால், அவர் அதை தாக்கல் செய்யட்டும்" என்றார்.