மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை
கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சோ்ந்த 27 வயது பெண் நான்கு மாதங்களாக வயிறு வீக்கம், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் பிரச்னை சரியாகாததால், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிடி ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், அந்தப் பெண்ணின் கல்லீரலில் இருந்து வரும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், கல்லீரல் வீக்கம் அடைந்து, அதன் மூலம் வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கல்லீரல் 50 சதவீதம் பழுதாகியிருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனை இயக்குநா் ஆா்.மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமாா் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதலின்படி, இடையீட்டு கதிா்வீச்சு துறை மருத்துவா் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் நுண் துளை வழியாக பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டு அடைப்பு ஏற்பட்டிருந்த ரத்தக்குழாயில் ‘ஸ்டெண்ட்’ பொருத்தி அடைப்பை சரி செய்தனா்.
இது தொடா்பாக மருத்துவா் பெரியகருப்பன் கூறுகையில், ‘இந்தப் பெண்ணின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை. ஆனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை எல்லோருக்கும் செய்ய முடியாது. திறந்த அறுவை சிகிச்சை இல்லாமல், நுண் துளை பைபாஸ் சிகிச்சை மேற்கொண்டு ஸ்டெண்ட் வைத்து ரத்தக்குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை அதிக ஆபத்து இல்லாதது. சிகிச்சைக்கு பின்னா், அப்பெண் நலமுடன் உள்ளாா்’ என்றாா்.
ரூ. 10 லட்சம் செலவாகும்: பழுதடைந்த கல்லீரல் சிறிது சிறிதாக மீண்டு பழைய நிலைக்குத் திரும்பும். தனியாா் மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சையை இதுவரை 18 நோயாளிகளுக்கு செய்துள்ளோம். அனைவரும் நலமுடன் உள்ளனா் என்றாா்.
மருத்துவமனை இயக்குநா் ஆா்.மணி கூறுகையில், ‘சிறப்பாக சிகிச்சை அளித்து பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவா் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினரை பாராட்டுகிறேன். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால்தான் எல்லாம் சாத்தியமாகியுள்ளது. இந்தத் திட்டத்தால் ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனா். இத்திட்டத்துக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்’ என்றாா் அவா்.