சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
நாமக்கல்: குடியிருப்பு பகுதியில் நடைபாதையை அடைத்த இன்ஜினியர் -நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!
நாமக்கல் மாநகராட்சி 19 -வது வார்டில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்று 33 குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர் இவர்கள் குடியிருப்பில் இருந்து நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த இடத்தில் நடந்து செல்வதற்கு வசதியாக ரோடு போட்டு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். ஆனால், அறநிலைத்துறை அதிகாரிகள் கோயிலுக்கு சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தக் கூடாது என கூறி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டது இந்த பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இதை ஒட்டி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ் குமார் எம்.பி, ஆட்சியர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியர் உமாவிடம் அப்பகுதி மக்கள் எங்களுக்கு நடந்து செல்ல வழிப்பாதை வேண்டும் தற்போது கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்ட முழு இடத்தையும் பயன்படுத்துவதால் வழிப்பாதை இல்லாத நிலை ஏற்படும். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆட்சியர், மேப் போட்ட இன்ஜினியர் யார் எனக் கேட்டு அழைத்து பிரச்னை குறித்து கேட்டறிந்தார். அப்போது, மக்கள் செல்லும் வழித்தடத்தை அடைத்து எவ்வாறு கட்டடம் கட்ட பிளான் போட்டீர்கள். இங்குள்ள 33 குடும்பத்தினர் காலம் காலமாக பயன்படுத்தி வரும் வழித்தடத்தை அடைத்து விட்டால் அவர்கள் எவ்வாறு சென்று வருவார்கள். மறுபுறம் பட்டா நிலம் உள்ளது. பட்டா நிலத்தினர் பாதையை அடைத்து விட்டார்கள். கடந்த 2000 ஆண்டு நமது அரசாங்கம் இவர்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. நீங்கள் பாதையை விட்டுவிட்டு கட்டடம் கட்டுங்கள். இந்த இடம் சாலையாக தான் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று இன்ஜினியருக்கு டோஸ் விட்டார். அதன் மூலம் பொதுமக்கள் பயன்படுத்த வழிப்பாதை விட்டு கட்டடம் கட்ட ஒப்புக்கொண்டனர்.