`இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது; பின், எதற்கு நம் டாலர்கள்?!' -எலான் மஸ்க்கை வழிமொழியும் ட்ரம்ப்
சமீபத்தில் தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் அங்கம் வகிக்கும் எலான் மஸ்க், 'இதுவரை இந்தியாவின் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க அமெரிக்கா இந்தியாவிற்கு தந்து வந்த 21 மில்லியன் டாலர் நிதியை நிறுத்துவதாக' அறிவித்திருந்தார்.
இதற்கு வழிமொழிவதைப் போல், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தியாவிற்கு எதற்காக நாம் 21 மில்லியன் டாலர்கள் தருகிறோம்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. உலகிலேயே அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அதிக வரி காரணத்தால் அமெரிக்கா இந்தியாவிற்குள் வணிகம் செய்வது மிக கடினம்.
எனக்கு இந்தியா மீதும், இந்தியாவின் பிரதமர் மீதும் மிகுந்த மரியாதை உள்ளது. அதற்காக, 21 மில்லியன் அமெரிக்கா டாலர்களை இந்தியாவில் வாக்களிப்பை அதிகரிப்பதற்காக கொடுப்பதா?' என்று பேசியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இது சம்பந்தமான அறிவிப்பில் லிபிரியா, மாலி, வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கும் கொடுக்கப்பட்டு கொண்டிருந்த நிதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நிதி ரத்து அறிவிப்பு தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் அமித் மாள்வியா, "வாக்களர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு 21 மில்லியன் டாலர்களா? இது நிச்சயம் இந்தியா தேர்தல் செயல்பாட்டில் வெளிப்புற தலையீடு ஆகும். இதனால் யாருக்கு லாபம்? நிச்சயம் ஆளும் கட்சிக்கு அல்ல" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.