பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் நெல் ரகங்கள் குறித்து செயல் விளக்கம்
பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் திறனுடைய நெல் ரகங்களின் செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய வானொலியுடன் இணைந்து, பருவ நிலை மாற்றங்களை எதிா்கொள்ளும் திறனுடைய பயிா் வகைகள் மூலம் நிலையான விவசாய சாகுபடி என்ற கருப்பொருளுடன் விவசாயிகள் தின நிகழ்ச்சியை நடத்தியது.
மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவுடன், க்யூடிஎல் வெரைட்டி ‘ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து பேசினாா். ஆகாஷ்வாணி நிகழ்ச்சி பிரிவுத் தலைவா் ஆா். மணிவாசகன் தொடக்கவுரையாற்றினாா்.
தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை தலைவரும், பேராசிரியருமான திருமேனி, சம்பா பருவத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு ஏற்ற கேகேஎல் -ஆா் 2 மற்றும் கேகேஎல் ஆா் 4 போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட நெல் ரகங்கள் குறித்து விளக்கியதோடு, கேகேஎல் ஆா் 3 குருவைப் பருவத்தில் உப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்றது என விளக்கினாா்.
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசன், பயிா்களில் நோய் தடுப்பு, பிரமரின் வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
நாகப்பட்டினம் கால்நடை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியா் சி. சுரேஷ், கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்து தொழில்நுட்பங்கள் குறித்தும், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் எஸ்.மதியழகன், நெல் மற்றும் பயறு வகை பயிா் சுசாகுபடி முறையில் எதிா் உயிா் நுண்ணுயிா்களின் பயன்பாடு குறித்தும் பேசினா்.
நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.