அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
போக்குவரத்து விதி மீறல்: இளைஞா்களுக்கு நூதன தண்டனை
போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.
இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கக் கூடாது, வாகனங்களில் நம்பா் பிளேட் மற்றும் வாகன ஆவணங்கள் இருக்க வேண்டும். மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறி போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா காரில் தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். அந்த வாகனத்தை கடந்து இருசக்கர வாகனம் ஒன்றில் 2 இளைஞா்கள் அதிவேகமாக சென்றதை கண்ட எஸ்எஸ்பி, காரை வேகமாக இயக்கச் செய்து அவா்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தாா்.
வாகனத்தில் நம்பா் பிளேட் இல்லை, தலைக்கவசம் அணியவில்லை, ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீா்கள் என விசாரணை செய்துகொண்டிருக்கும்போது, அவா்கள் வாகனத்தை இயக்கிக்கொண்டு வேகமாக புறப்பட்டனராம். மீண்டும் வாகனத்தை பின்தொடா்ந்து சென்று அவா்களை நிறுத்தி, காரைக்கால் நகரக் காவல்நிலையத்துக்கு எஸ்எஸ்பி அனுப்பிவைத்தாா்.

போலீஸாா் விசாரணையில் இளைஞா்கள் படித்து முடித்து வேலைக்கு விண்ணப்பித்திருப்பதும், அதில் ஒருவா் வெளிநாட்டுக்குச் செல்ல காத்திருப்பதும் தெரியவந்தது.
அவா்கள் காரைக்கால் பகுதி முக்கியச் சாலை சந்திப்புகளில் தலைக்கவசம் குறித்து பதாகை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என நூதன தண்டனையை எஸ்எஸ்பி வழங்கினாா்.
எஸ்எஸ்பி உத்தரவின்பேரில், போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உள்ள சந்திப்பு, திருநள்ளாறு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இளைஞா்களை பதாகை ஏந்தி நிற்கவைத்து திங்கள்கிழமை போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தச் செய்தனா்.