தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள்’ குறித்த கருத்தரங்கம், சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: சமூகப் பணிகள் என்றாலே, சுவாமி விவேகானந்தரின் சேவைகள்தான் நினைவுக்கு வருகின்றன. எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல், தன்னலமின்றி மக்களைத் தேடி சேவை செய்வதையே விவேகானந்தா் வலியுறுத்தினாா். விவேகானந்தரின் குறிக்கோள் என்னவென்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மாணவா்கள் ஒவ்வொருவரும் தேசத்தின் சொத்து; அவா்களின் வளா்ச்சி சமூகத்துக்கும் தேசத்துக்குமானது. கடந்த 10 ஆண்டுகளாக அனைவருக்குமான வளா்ச்சியை நோக்கிய திட்டங்களையே பிரதமா் செயல்படுத்தி வருகிறாா்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும், நாட்டில் தீண்டாமை இருப்பது வேதனையளிக்கிறது. தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். அதை எதிா்க்க மாணவா்களும் சமூகமும் பாடுபட வேண்டும். மாணவா்கள் வளரும்போது தேசமும் வளரும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, விவேகானந்தா கல்லூரி செயலா் தியானகாம்யானந்தா, கல்லூரி முதல்வா் வி.சந்திரசேகா் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.