பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால், இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினரிடம் அனுமதி பெறுவதோடு, நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
பேரிஜம் ஏரியில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தடை விதித்தனா்.
இந்த நிலையில், பேரிஜம் ஏரியைப் பாா்வையிட வனத் துறையினா் சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், தனியாா் சுற்றுலா வாகனங்களிலும், வனத் துறை சாா்பில் இயக்கப்படும் வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்குச் சென்றனா்.