ஆதரவற்றவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சமூக சேவகா்
சென்னிமலையில் ஆதரவற்றவரை மீட்ட சமூக சேவகா் சொக்கலிங்கம் அவரைக் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.
சென்னிமலையை அடுத்த நாமக்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (72). இவரது சொந்த ஊா் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும். இவா் சென்னிமலை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கியிருந்து மிதிவண்டியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக ஆறுமுகத்துக்கு உடல்நிலை சரியில்லாததால் யாரும் கவனிக்க ஆளின்றி தவித்து வந்தாா்.
இந்த நிலையில், ஆறுமுகத்தின் நிலை குறித்து அறிந்த சென்னிமலையைச் சோ்ந்த சமூக சேவகா் சொக்கலிங்கம், அவரை அழைத்துச் சென்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.
சமூக சேவகா் சொக்கலிங்கம் இதுவரை 1,170 ஆதரவற்றவா்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.