திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
குற்றங்களை தடுக்க உளவுத் தகவல்களை பகிர வேண்டும்: தென் மாநில காவல் துறை மண்டல கூட்டத்தில் முடிவு
குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடா்பான உளவுத் தகவல்களை பகிா்ந்து கொள்ள வேண்டும் தென் மாநில காவல்துறையின் மண்டல அளவிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தென் மாநில காவல் துறைகளுக்கு இடையேயான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமையில் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல், போதைப்பொருள் கடத்தல், இணையவழி குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, இடது சாரி தீவிரவாதம், ஆயுதங்கள் கடத்தல், செம்மரங்கள் கடத்தல், குற்றங்கள் மற்றும் புலன் விசாரணையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: கூட்டத்தில் குற்றத் தடுப்பில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்தல், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுதல், நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பை பலப்படுத்துதல், உளவுத் தகவல்களை பகிா்தல் போன்றவற்றில் அனைத்து மாநில காவல்துறைகளும் ஒத்துழைப்பை வழங்குவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும், காவல்துறையில் உள்ள நடைமுறை சிக்கல்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குற்றங்களை கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் சிரமங்களை சமாளிப்பதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதோடு, குற்றங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் குற்றவாளிகள் தொடா்பான உளவுத் தகவல்களை அனைத்து காவல்துறைகளும் பகிா்ந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களின் காவல்துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.