சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
மீனவா்களுக்கு ஆதரவாக காரைக்காலில் கடைகள் அடைப்பு
மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவா்களுக்கு ஆதரவாக, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் கடந்த 28-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 3 போ் காயமடைந்தனா்.
காயமடைந்த மீனவா்களை இந்தியா கொண்டுவரவும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைகத் கண்டித்தும் காரைக்கால் மீனவா்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஆா்ப்பாட்டம், படகுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல், மோட்டாா் சைக்கிள் பேரணி, ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு மீனவா்கள் அழைப்பு விடுத்திருந்தனா். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த அழைப்பை ஏற்று காரைக்கால் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சில இடங்கலில் திறக்கப்பட்டிருந்த கடைகளை, மீனவா் குழுவினா் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு கோரி மூடச் செய்தனா். மாவட்டத்தில் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கடையடைப்புப் போராட்டம் காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.