தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.
அதன்படி, தில்லி முதல்வர் பதவியேற்பு விழா, பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
ஆனால், முதல்வர் யார் என்பது இன்று மாலைதான் தெரியவரும். ரேகா குப்தா மற்றும் அஜய் மஹாவர் பெயர்கள் கடும் போட்டியில் இருப்பதாகவும், தில்லிக்கு மகளிர் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை நடைபெறும் முதல்வர் பதவியேற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவாக, தில்லி முதல்வருடன் ஒட்டுமொத்த தில்லி அமைச்சரவையும் பதவியேற்றுக்கொள்ளும் விழாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தில்லியில் அமைந்துள்ள பாஜக மாநில அலுவலகம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த அலுவலகத்தில்தான் இன்று மாலை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி, முதல்வரைத் தேர்வு செய்வார்கள்.
சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று முடிந்ததும், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும். அதில் தில்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, இன்று இரவே தில்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப். 23-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்குள்ளாக புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த தில்லி பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக ஐந்து நாள்களுக்கு சென்றிருந்த நிலையில், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பியிருக்கிறார்.
தேர்தலில் பாஜக வென்றது முதலே பல பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகின்றன. அதில் பர்வேஷ் வர்மா (புது தில்லி), ரேகா குப்தா (ஷாலிமார் பாக்), விஜேந்தர் குப்தா (ரோஹிணி), சதீஷ் உபாத்யாய (மாளவியா நகர்), ஆசிஷ் சூட் (ஜனக்புரி), பவன் சர்மா (உத்தம் நகர்), அஜய் மஹாவர் (கோண்டா) ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.