இலங்கைக்குக் கடத்தவிருந்த மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்: கேரள வாகன ஓட்டுநா் கைது
ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தவிருந்த 57 மூட்டை மஞ்சள், 6 மூட்டை பீடி இலைகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த வாகன ஓட்டுநரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகேயுள்ள தோப்புவலசை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தோப்புவலசை கடற்கரைப் பகுதியில் ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் இந்தப் பகுதிக்கு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் 6 மூட்டைகளில் பீடி இலைகளும், 57 மூட்டைகளில் மஞ்சளும் இருந்தன.
இதையடுத்து, சரக்கு வாகனம், பீடி இலை, மஞ்சள் மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மண்டபத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சுபினை (37) கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், பீடி இலை மூட்டைகளை ராமநாதபுரம் சுங்கத் துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.