நீலகிரி: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; காரணத்தைக் கண்டறிய களமிறங்க...
இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்ய வாய்ப்பு?
தொழிலதிபர் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றதில் தொடரப்பட்டுள்ள நிலையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்ததுடன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : மகாராஷ்டிர முதல்வர் அரியணைக்கான போட்டி ஆரம்பம்!
இதனைத் தொடர்ந்து, கென்யா அரசுடன் அதானி குழுமம் போட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூடோ வியாழக்கிழமை அதிரடியாக அறிவித்தார்.
கென்யாவை தொடர்ந்து அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க எந்நேரத்திலும் ரத்து செய்து உத்தரவிடுவார் என்று தெரிகின்றது.
என்ன ஒப்பந்தம்?
இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பிரதமர் மோடி வற்புறுத்தியதால், அத்திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு ஒதுக்க அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்ச கூறியதாக சிலோன் மின் வாரியத்தின் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதனை அதிபர் மறுத்தவுடன், கருத்துகளை பின்வாங்கிய மின் வாரிய தலைவர், தனது பதவியையும் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் அனுர குமார திசநாயக்க, தான் வெற்றி பெற்றால் அதானியின் ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது, நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழலில், அதானிக்கு எதிராக அமெரிக்காவில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை பயன்படுத்தி கென்யாவை தொடர்ந்து, இலங்கையிலும் ஒப்பந்தம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.