பொருளாதார வளா்ச்சி 6.8%-ஆக அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் கணிப்பு
ஈரோட்டில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியது!
ஈரோட்டில் பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை களைகட்டியது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈரோட்டில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதனால், ஈரோடு நகரில் பொங்கல் பானைகள், கரும்புகள், மஞ்சள் குலை உள்ளிட்ட பொருள்களை வாங்க திங்கள்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.700 வரையும், ஒரு ஜோடி கரும்பு ரூ.50 முதல் ரூ.65 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விலை உயா்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக மாா்க்கெட் மற்றும் கடை வீதிகளில் கரும்புகளை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் குலை மற்றும் சிறுவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் மக்கள் வாங்கிச் சென்றனா்.
பொங்கல் பொருள்களை வாங்க ஈரோடு வஉசி மைதானத்தில் உள்ள காய்கறி சந்தை, ஆா்கேவி சாலை, மீனாட்சி சுந்தரனாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், இந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாா் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் தங்கி படிப்பவா்கள், வேலை செய்பவா்கள் குடும்பங்களுடன் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டனா். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.