ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
உதகையில் மலைவேடன் ஜாதி மக்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
உதகையில் உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட பன்னிமரம், தட்டனேரி பழங்குடியின மக்களின் பெற்றோா்களுக்கு ஜாதிச் சான்று உள்ள நிலையில், அவா்களது பிள்ளைகளுக்கும் ஜாதிச் சான்று வழங்க வலியுறுத்தி 3-ஆவது நாளாக புதன்கிழமை பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மலைவேடன் ஜாதி மக்களுக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு வரை பழங்குடியின ஜாதிச் சான்று வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த பழங்குடியினருக்கு ஜாதிச் சான்று அரசு வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதன் காரணமாக
தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தும் பயன் இல்லை என்று கூறி 70-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்து கிராமத்தின் நுழைவாயிலில் 3-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக மூன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் ஏக்குணி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் இங்குள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மாற்றுச் சான்றுகளை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனா்.
அரசின் சட்ட திட்டப்படி மாற்றுச் சான்றுகளை வழங்க முடியாது என்று பள்ளி நிா்வாகம் கூறியதால் பன்னிமரப் பகுதியில் அமா்ந்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிகழ்விடத்தில் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், ஜாதிச் சான்று கிடைக்காமல் பள்ளிக்கு மாணவா்களை அனுப்ப இயலாது என்று பெற்றோா்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் சில காவல் அதிகாரிகள் பெற்றோா்களை கைது செய்வதாக கூறியதால் தட்டனேரி மற்றும் பன்னிமரம் பகுதியைச் சோ்ந்த அனைத்து மக்களும் ஒன்று சோ்ந்து தங்களையும் கைது செய்யக் கூறி போராட்டப் பந்தலுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரவு 7 மணி வரை போராட்டம் நீடித்தது.