உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரிக்கை
உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
உத்தமபாளையம் பேரூராட்சி வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையோரங்களில் தற்போது ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இதனால், தேசிய நெடுஞ்சாலை குறுகிய சாலையாக மாறியதால், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.
இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உத்தரவின் அடிப்படையில், உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் கடை முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதன் காரணமாக, ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடத்தை நெடுஞ்சாலைத் துறையினா் இடிக்காமல் சென்று விட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.