செய்திகள் :

உயிர்வேலி: முன்னொரு காலத்தில் அந்த வேலியில் எத்தனையெத்தனை உயிர்கள் வாழ்ந்தன தெரியுமா?

post image

யிர்வேலி. முந்தைய தலைமுறையினரிடம் இருந்த இயற்கை தொடர்பான அறிவை இன்றளவும் நமக்கெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பது. ஓர் உயிர்வேலியை எப்படி உருவாக்கினார்கள்; அதில் எத்தனையெத்தனை பதுங்கு உயிர்கள் வாழ்ந்துக்கொண்டிருந்தன; அந்த உயிரினச்சங்கிலி எப்படி இருந்தது என சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களிடம் கேட்டோம்.

உயிர்வேலி - சதுரக்கள்ளி
உயிர்வேலி - சதுரக்கள்ளி

’’மனிதன் சில ஏக்கர்களை ஆக்கிரமித்துக்கொண்டு, அந்த இடத்தில் ஏற்கெனவே வாழ்ந்துக்கொண்டிருந்த உயிர்களுக்கு சில அடிகளை வழங்குவதைத்தான் உயிர்வேலி என்கிறோம். பயிர் செய்யும் நிலத்துக்கான எல்லையை வகுப்பதும் இந்த உயிர்வேலிதான். உதாரணத்துக்கு, நம்முடைய தோட்டத்தின் அளவு 5 ஏக்கர் என்றால், அதைச் சுற்றி 5 அடி அகலத்துக்கு பலவகை தாவரங்களால் ஆன வேலி ஒன்றை அமைப்பார்கள். அதுதான் உயிர் வேலி. ஒரு தோட்டக்காரரின் ஆடும் மாடும் அடுத்தவர் தோட்டத்தில் மேயாமல் தடுக்கும் இந்த வேலி.

உயிர்வேலியே தாவரத்தால் ஆனதுதான். அப்படியென்றால், அந்த வேலியையே ஆடும் மாடும் மேய்ந்துவிடாதா என்றால், அப்படி நடக்கவே நடக்காது. அதற்காகத்தான் உயிர்வேலியில் குறுமரங்களில் முள் நிறைந்த இலந்தை மற்றும் விடத்தலைக்கும், முள் அதிகமாக இருக்கிற கற்றாழைகளுக்கும் கள்ளிகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்புறம் எப்படி ஆடும் மாடும் மேய முடியும்..? குறிப்பாக, யானைக்கற்றாழையும், கள்ளிகளில் வட்டக்கள்ளியும், சதுரக்கள்ளியும் அதிகமிருக்கும் உயிர்வேலிகளில். இதில் சதுரக்கள்ளி பல உயிர்கள் பதுங்கிக்கொள்ள வசதியாக மரங்கள்போல உயரமாகவும் அடர்த்தியாகவும் வளரும். தவிர, நிலத்தைப் பொறுத்தும், அதன் பரப்பளவைப் பொறுத்தும், விளைநிலங்களை சேதப்படுத்த வரும் விலங்குகளைப் பொறுத்தும் உயிர்வேலியில் இடம்பிடிக்கும் மரங்கள் மாறுபடும்.

குள்ளநரி
குள்ளநரி

சரி, இரண்டு தோட்டத்துக்கும் இடையில் உயிர்வேலி போட்டுவிட்டால் போக வர வழி இருக்காதே என்றால், ஒரு மாட்டு வண்டி போவதற்கு சில அடி இடத்தைவிட்டே இந்த வேலியை உருவாக்குவார்கள். இந்த இடத்தை 'வண்டித்தடம்' என்றனர் நம் முன்னோர்கள். இந்த உயிர்வேலிப் பாதையை இட்டேரி என்றும் சொல்வார்கள். இந்த இட்டேரியில் கீரி, முயல், எறும்புத்தின்னி, குள்ளநரி, உடும்பு போன்ற 'பதுங்கு உயிர்கள்' வளை தோண்டி வாழ்ந்து வரும்.

உயிர்வேலியில் இருக்கிற கற்றாழைகளுக்கும் கள்ளிகளுக்கும் ஊடே பழங்கள் தருகிற கோவை போன்ற கொடிகளையும், பசலைப்போன்ற மூலிகை குணமிக்க கொடிகளையும் படர விடுவார்கள். பழுத்துவிட்ட இவற்றின் பழங்களை சாப்பிட கிளி உள்ளிட்ட பறவைகள் வரும். அந்தப்பறவைகள் இடுகிற எச்சங்களில் இருக்கிற விதைகளில் இருந்து முளைக்கிற தாவரங்களும், கொடிகளும் உயிர்வேலியை இன்னும் இன்னும் என அடர்த்தியாக்கிக்கொண்டே போகும்.

கோவைக்கொடி
கோவைக்கொடி

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, உயிர்வேலிக்கு இவ்வளவு இடம் ஏன் விட வேண்டும் என்கிற எண்ணம் மனிதனுக்கு தோன்றும்வரை! ஆனால், அவனால் உயிர்வேலியில் இருந்த கற்றாழையையும் கள்ளியையும் அழிக்க முடியவில்லை. வெட்ட வெட்ட தழைக்கும் தன்மைகொண்டவை அவை. அவற்றை அழிக்க, மாவுப்பூச்சியை அதன் மேல் போடுகிறான். மாவுப்பூச்சியும் மனிதன் நினைத்தபடியே கற்றாழையையும் கள்ளியையும் சாப்பிட்டு முடிக்கிறது. இவற்றின் மேல் படர்ந்து வாழ்ந்து கிடந்த கொடித்தாவரங்களின் நிலைமைபற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை.

இப்போது உயிர்வேலி இல்லை. உயிர்வேலிக்குள் பதுங்கிக்கிடந்த உயிர்களும் இப்போது அங்கில்லை. அந்த இடத்தில் கம்பி வேலி இடுகிறான் மனிதன். மனிதன் எதிர்பார்த்தபடி கற்றாழையையும் கள்ளியையும் உண்டு செரித்த மாவுப்பூச்சிகள், அவன் எதிர்பாராத ஒன்றையும் செய்ய ஆரம்பிக்கிறது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' தானே... இந்த நியதிப்படி, மனிதனின் தோட்டத்துக்குள் நுழைந்து அவன் பயிரிட்டு வளர்த்த தாவரங்களையும் தின்று செரிக்க ஆரம்பித்தன. இந்த மாவுப்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மீதப்பட்ட கற்றாழையையும் கள்ளியையும் உண்டு செரிக்க அங்கேயும் பரவிவிட்டன'' என்று வேதனைப்படுகிறார் கோவை சதாசிவம்.

மாவுப்பூச்சி
மாவுப்பூச்சி

’’வீட்டுக்கும் காட்டுக்கும் இடைப்பட்ட நெருங்கிய சூழலை சமவெளிச்சூழல் என்போம். இந்தச் சூழலில் வாழ்கிற பல உயிர்கள் மனிதனுடைய வாழ்வியலில் மிக முக்கியமானவை. குறிப்பாக, முள்ளெலிகள். பந்துபோல சுருண்டு உயிர்வேலியில் படுத்துக்கிடக்கும் இவை. இவற்றைப்பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்களாக நாம் இருக்கிறோம். முள்ளெலிகள் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 400 பூச்சிகளைச் சாப்பிட்டு வாழுகிற ஓர் இனம். குட்டிக்குட்டிப் பாம்புகளையும், தேள்களையும், பூரான்களையும்கூட தின்றுவிடும் இந்த முள்ளெலிகள்.

உயிர்வேலிகளை அழித்து, முள்ளெலிகளை இல்லாமலே ஆக்கி விட்டோம். அவை மட்டும் இருந்திருந்தால், இன்றைக்கு விளைநிலங்களில் இந்தளவுக்கு பூச்சித்தாக்குதலை மனித இனம் சந்தித்திருக்காது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆதாரக்கண்ணியான முள்ளெலிகளைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்ல, சென்ற தலைமுறைக்குக்கூட தெரியாமல்போனதுதான் மிகப்பெரிய துயரம்.

மயில்களைக் கட்டுப்படுத்திய கீரிகளும், குள்ளநரிகளும், காட்டுப்பூனைகளும் உயிர்வேலிகளில்தான் பதுங்கி வாழ்ந்தன. உயிர்வேலி இருந்தவரை அதைத்தாண்டி எந்தப் பறவையும் விளை நிலங்களை சேதப்படுத்தியதில்லை. இன்று உயிர்வேலி இல்லை. அதனால், மயில்களைக் கட்டுப்படுத்திய உடும்பு, கீரி, காட்டுப்பூனை போன்ற உயிர்களுக்கான வாழ்விடங்களும் இல்லை. கம்பி வேலிகள் போட்டான் மனிதன். அதைத்தாண்டி வந்து பயிர்களை நாசமாக்கத் தொடங்கின மயில்கள். எல்லாம் நாம் விதைத்த வினைதான்’’ என தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறார் கோவை சதாசிவம்.

’’உயிர்வேலி இன்னொரு நன்மையையும் மனிதனுக்கு செய்துவந்தது. அதில் வாழ்ந்துவந்த எண்ணற்ற உயிர்களின் எச்சங்களால் மண் வளமாக இருந்தது. மனிதன் போட்ட கம்பி வேலி மண்ணின் வளத்திலும் மண்ணள்ளிப்போட்டுவிட, மனிதன் ரசாயன உரங்களை நம்ப ஆரம்பித்தான்.

உயிர்வேலி
உயிர்வேலி

உயிர்வேலியில் வாழ்ந்த காடை, கெளதாரி உள்ளிட்ட சிறு சிறு குருவிகள், ஓணான்கள், அரணை, தவளைகள் மற்றும் முள்ளெலிகள் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தின. இவற்றை பாம்புகள் கட்டுப்படுத்தின. சிலவகை பறவைகள், பாம்புகளைக் கட்டுப்படுத்தின. மயில்களை கீரியும் நரிகளும் கட்டுப்படுத்தின. முயல்களைக் காட்டுப்பூனைகள் கட்டுப்படுத்தின. இந்தப் பூனைகளை குள்ளநரிகள் கட்டுப்படுத்தின.

உடும்பு, கீரி, காட்டுப்பூனை, குள்ளநரி, எறும்புத்திண்ணிகளை ஆண்மைப்பெருக்கி என நம்பி மனிதன் எப்படியெல்லாம் அழித்தான் என்பது தனி கட்டுரை.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

இப்படி வீட்டுக்கும் காட்டுக்கும் இடைப்பட்ட சமவெளிச்சூழல் மண்டலத்தில், உயிரினங்கள் ஒன்றையொன்று கட்டுப்படுத்துகிற உயிரினச்சங்கிலி இருந்தது. இதை மீறி, எந்தவொரு உயிரும் பெருகிவிட முடியாது. ஆனால், எல்லாமே வாழும். இதுதான் உயிர்வேலியின் சிறப்பு’’ என்று முடித்தார் கோவை சதாசிவம்.

கன்னியாகுமரி: கோடை மழை பெய்தும் நிரம்பாத முக்கடல் அணை; தற்போதைய நிலை என்ன? | Photo Album

முக்கடல் அணைகோடை விடுமுறை... ஜாலிக்கு ஜாலி, லாபத்துக்கு லாபம்... முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய பங்குகள்..!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/... மேலும் பார்க்க

குன்னூர்: வீட்டிற்குள் நுழையும் குரங்குகள், அறவே தவிர்க்க அறிவுறுத்தும் வனத்துறை - காரணம் இதுதான்!

நீலகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் குரங்குகளின் நடமாட்டம் இயல்பு தான் என்றாலும், அண்மை காலமாக குடியிருப்புகளைச் சுற்றியும், சாலையோரங்களையும் குரங்குகள் தங்களின் நிரந்தர வாழ்விடமாக மாற... மேலும் பார்க்க

3 ஆண்டுகள், 30 நாடுகள் பயணம்... உலகம் முழுவதும் வலம் வரும் ”பிளாஸ்டிக் ஒடிஸி” கப்பல் - பின்னணி என்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பை, பாட்டில் என்று இல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட பிளாஸ்டிக் சென்ற... மேலும் பார்க்க