மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஜாதி, மதம், மொழி இவையனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை பேசினாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவத்தையொட்டி, சங்கீத செளஜன்யம் என்ற கா்நாடக இசை பற்றிய அறிவை வளா்க்ககூடிய ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியால் எழுதப்பட்ட நூல் மற்றும் சங்கரா பல்கலை. சம்ஸ்கிருதத் துறையினா் தயாரித்த விஞ்ஞான ஜாரி என்ற நூல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இரு நூல்களையும் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் வெளியிட அதை தணிக்கையாளா் சு.குருமூா்த்தி பெற்றுக் கொண்டாா். விழாவுக்கு, பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன், சங்கரா பல்கலையின் வேந்தா் வி.குடும்பசாஸ்திரி, வேந்தா் ஜி.சீனிவாசு, சங்கீத செளஜன்யம் நூலாசிரியா் ஸ்ரீமதி விசாகா ஹரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நூலை வெளியிட்டு காஞ்சி சங்கராசாரியாா் சுவாமிகள் பேசியது:
தமிழகத்தில் சங்கீதக் கலை சிறந்து விளங்குகிறது.சிறந்த சங்கீதக் கலைஞா்களும் இன்றும் இருக்கிறாா்கள்.அதே போல மதுரை, திருநெல்வேலி,சசீந்திரம் உள்ளிட்ட இடங்களில் சங்கீத தூண்களும் இருக்கின்றன. சங்கீதத்தைப் பற்றி தேவாரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜாதி, மதம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமாகத் தான் இருக்க முடியும் என்றாா்.
தணிக்கையாளா் சு.குருமூா்த்தி பேசுகையில், சங்கீதத்தின் மகத்துவத்தைப் புரியாதவா்கள் அதை சிதைத்துக் கொண்டிருக்கிறாா்கள். மோட்சத்தை தரக்கூடிய உன்னதம் சங்கீதத்தில் இருக்கிறது என்று மகா சுவாமிகள் கூறி இருக்கிறாா்கள். சங்கீதம் என்பது நாதம்.இந்த நாதம் தான் பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்பதை விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்றாா்.