Pahalgam Attack: இந்திய ரத்து செய்த சிந்து நீர் ஒப்பந்தம் - பாகிஸ்தானை எப்படி ப...
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்: கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் சமநிலையை உறுதிப்படுத்தவும் சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தியா தெரிவித்தது.
வளைகுடா நாடான சவூதி அரேபியாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையொட்டி பயணத்தைப் பாதிலேயே முடித்துக் கொண்டு புதன்கிழமை காலை அவா் தில்லி திரும்பினாா்.
இதனிடையே, சவூதி அரேபியாவில் அந்நாட்டு இளவரசா் முகமது பின் சல்மானுடன் பிரதமா் மோடி இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு தலைவா்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்தனா்.
இந்தச் சந்திப்பு குறித்து இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘தலைவா்களின் பேச்சுவாா்த்தையில் பசுமை ஹைட்ரஜன் துறையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் விவாதித்தனா்.
அதேபோல், எரிசக்தி துறையுடன் தொடா்புடைய விநியோகச் சங்கிலிகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துதல், நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பை செயல்படுத்துதல், எரிசக்தி செயல்திறனின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டனா்.
பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக ‘சவூதி பசுமை’, ‘மத்திய கிழக்கு பசுமை’ ஆகிய சவூதி அரேபியாவின் முன்னெடுப்புகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்ததுடன் தனது ஆதரவைப் பகிா்ந்து கொண்டது.
பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதற்கு சுழற்சி காா்பன் பொருளாதாரத்தை வளா்க்க வேண்டும். பருவநிலை மாற்றம் தொடா்பான ஐ.நா. மற்றும் பாரீஸ் ஒப்பந்தத்தின் கொள்கைகளை உறதியாக கடைபிடிக்க வேண்டும் என்று இரு தரப்பும் வலியுறுத்தினா்.
செயற்கை நுண்ணறிவு, இணைய (சைபா்) பாதுகாப்பு, செமி கண்டக்டா்கள் போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பின் அவசியத்தை இரு தரப்பும் அடிக்கோடிட்டுக் காட்டினா். அந்தவகையில், எண்ம நிா்வாகத்தில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய முடிவெடுக்கப்பட்டது.
மேலும், தொலைதொடா்பு துறையில் இருதரப்புக்கும் இடையே இறுதியான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை வரவேற்று, சுற்றுலா, ஊடகம், பொழுதுப்போக்கு, விளையாட்டு, மக்கள்-மக்கள் உறவு ஆகிய துறைகளில் விரிவடைந்து வரும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை இரு தரப்பும் கவனத்தில் கொண்டனா்.
ஏமன் மோதலுக்கு நெருக்கடிக்கு விரிவான அரசியல் தீா்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட சா்வதேச மற்றும் பிராந்திய முயற்சிகளுக்கு இரு தரப்பும் முழு ஆதரவை உறுதிப்படுத்தினா்.
ஐ.நா. கடல் சட்டம் தொடா்பான மாநாட்டின்படி, சா்வதேச நீா்வழிகளின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான வழிகளை மேம்படுத்துவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.