பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமுக்கு அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் நாடெங்கும் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை குவிந்திருந்தனா். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டினா் உள்பட 26 போ் உயிரிழந்தனா்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சோ்ந்த ஆசிஃப் ஃபெளஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் என்பது அடையாளம் காணப்பட்டது.
தாக்குதலில் உயிா் பிழைத்தவா்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வரையப்பட்ட பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமறைவாகிய அவா்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், பஹல்காமுக்கு புதன்கிழமை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு, தாக்குதல் நடந்த இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தாக்குதல் குறித்த விசாரணையில் உள்ளூா் காவல்துறைக்கு என்ஐஏ அதிகாரிகள் உறுதுணையாக இருப்பா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.