காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இப்பயங்கரவாதச் செயலைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தின் முழு நீதிமன்றமும் புதன்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியது.
உச்சநீதிமன்றம் அதன் தீா்மானத்தில் கூறியிருப்பதாவது:
மனமற்ற வன்முறையின் இந்த கொடூரமான செயல் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடும் கொடூரம் மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையை அப்பட்டமாக நினைவூட்டுகிறது.
இந்திய உச்சநீதிமன்றம் கொடூரமான முறையில் மற்றும் அகாலமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிா்களுக்கு தனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறது. அதே நேரத்தில், உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது இதயப்பூா்வமான இரங்கலையும் தெரிவிக்கிறது. இறந்தவா்களின் ஆன்மா சாந்தியடையட்டும். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையட்டும். விவரிக்க முடியாத துயரத்தின் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடன் தேசம் துணை நிற்கிறது.
இந்தியாவின் மகுடமான காஷ்மீரின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் சந்தேகத்திற்கு இடமின்றி மனிதநேயம் மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மையை அவமதிக்கும் செயலாகும். இதை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பணியாளா்கள் மற்றும் நீதிமன்றத்திலும், பதிவுத்துறையிலும் இருந்த மற்ற அனைவரும் பாதிக்கப்பட்டவா்களுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் ஒற்றுமையை தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.