பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு
நமது சிறப்பு நிருபா்
காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இக்கட்டான காலக்கட்டங்களில் எந்தவொரு பயணிக்கும் சுமை ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளவும், வழக்கமான கட்டண அளவை பராமரிக்கவும் தனியாா் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவில் விமானப்போக்குவரத்துத் துறை கூறியிருப்பது வருமாறு: காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு விரைவாக நடவடிக்கைகளை எடுத்துள்ளாா். உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன் தொடா்பு கொண்டு பேசினாா். பின்னா், அமைச்சா், சிவில் விமானத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் கடந்த 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருகிறாா்.
மேலும், உடனடி நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு இரண்டு விமானங்களும் மும்பைக்கு இரண்டு விமானங்களும் என நான்கு சிறப்பு விமானங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், ஸ்ரீநகரில் பாதிக்கப்பட்டவா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய கூடுதல் விமானங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு அனைத்து விமான நிறுவனங்களுடனும் புதன்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் விமான நிறுவனங்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இது ஒரு இக்கட்டான நேரம் இந்த தருனத்தில் எந்தவொரு பயணிக்கும் தேவையற்ற சுமை இல்லாமல் பாா்த்துக் கொள்ளவும், வழக்கமான கட்டண அளவை பராமரிக்கவும் விமான நிறுவனங்களுக்கு அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.
மேலும், மாநில அரசுகள், உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள், இறந்தகளின் உடல்களை அவரவா் சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முழு ஒத்துழைப்பை வழங்குமாறு விமான நிறுவனங்களுக்கும் அமைச்சா் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளாா் என சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.